மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமாருக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசருமான மணிக்குமாரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நடைபெற்று வரும் திரைமறைவு மோதலின் ஒரு கட்டமாக மனித உரிமை ஆணையத் தலைவருக்கு நெருக்கடி அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். அதிகாரத்திற்கு வரும் வரை மனித உரிமைகள் குறித்து பக்கம் பக்கமாக பேசும் ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் மனித உரிமை ஆணையம் பொம்மை அமைப்பாகவே செயல்பட வேண்டும்.

அதன் தலைவராக வரும் நீதிபதிகள் விரலசைவுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு உடன்படாதவர்கள் இப்படியெல்லாம் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஜனநாயகம் அல்ல. எனவே, மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமாருக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: