பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா மற்றும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 9 நூல்கள் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் 9 நூல்களையும் வெளியிட்டார். இந்த நூல்களை பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம். உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளைப் பேசினோம்; உலக அறிஞர்களின் வரலாற்றைப் பேசினோம்; நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளைப் பேசினோம்;

மூடநம்பிக்கை பிற்போக்குத்தனம் – பெண்ணடிமைத்தனம் – இவைகளுக்கு எதிராகப் பேசினோம். பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை தம்பி உதயநிதியிடம் நான் ஒப்படைத்தேன். இளைஞரணிச் செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து, அவர் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்தவரையில், அந்த பொறுப்பு நான் அவருக்கு கொடுத்த பயிற்சி. அப்படி பார்க்கும்போது, நான் வைக்கும் ஒவ்வொரு ‘டெஸ்ட்’-லயும் அவர் ‘சென்டம்’ ஸ்கோர் எடுக்கிறார்.

இளைஞரணிக்கு வழங்கப்பட்ட கடமைதான், கழகத்துக்காக 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் மாபெரும் பணி. இளைஞரணியினர் இந்தப் போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்கள். இப்போது 182 பேச்சாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார் உதயநிதி. சொற்களை வென்ற இந்தச் செல்வங்களுக்கான பரிசுத்தொகையை நீங்கள் இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும். போட்டியில் பங்கேற்றிருக்கும் 17 ஆயிரம் பேரும் பாராட்டுக்கு உரியவர்கள்தான். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.

இனி உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும், திமுக நிகழ்ச்சிகளிலும் இங்குள்ள 182 பேச்சாளர்களை நீங்கள் பயன்படுத்தி ஆக வேண்டும். ஏன் என்றால், இங்கிருப்பவர்கள் பேச்சாளர்கள் மட்டும் அல்ல, இவர்கள்தான் திமுகவின் எதிர்காலத் தலைமுறை. திராவிட இயக்கம் இளைஞர்களால் இளைஞர்களுக்காகத் தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம். இங்கு கொள்கை வீரர்களாக வாருங்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா சொன்னதை நெஞ்சில் தாங்கி கருத்துகளைச் சொல்லுங்கள் கலைஞர் சொன்ன ஐம்பெரும் முழக்கங்களைக் கடைக்கோடிக்கும் எடுத்துச் செல்லுங்கள்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திமுக பொருளார் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுகவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

* மேடை கிடைக்காதா என காத்திருந்த காலம்
உங்களைப் போன்றுதான், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா, இப்படி ஒரு மேடை கிடைக்காதா என்று நாங்கள் எல்லாம் காத்திருந்த காலம் உண்டு. நானும் உங்களை மாதிரி மேடைகளில் பேசி வளர்ந்தவன்தான் இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 1971ல், எனக்கு 18 வயது. கோவை மாணவர் மாநாட்டில் கல்லூரி மாணவனாகக் கலந்து கொண்டேன்.

ஏராளமான பேச்சாளர்கள். அண்ணன் துரைமுருகன் மாதிரியான ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். மாநாட்டுக்கு தலைமை வகித்த அண்ணன் எல்.ஜி.யிடம் 2 நிமிடம் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். 2 நிமிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது, மேடையேறினேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: