த.வெ.க. மாநாட்டு துளிகள்

* ஏற்பாடு சரியில்லை கண்டித்த விஜய்
த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது முதல் பந்தல்கால் நடுவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். போக்குவரத்து தொடர்பாக சரிவர நடவடிக்கை எடுக்காததால் ஆங்காங்கே கடுமையான நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டிற்கு பின்புறம் ரயிலில் இருந்து குதித்த 2 தொண்டர்கள் காயமடைந்தனர். ஒருவரையொருவர் முண்டியடித்து திடலுக்கு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெரிசலை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட பவுன்சர்களும், இளைஞர்களின் ரகளைக்கு தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும் சிரமப்பட்டனர். தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளும் சரிவர செய்யப்படவில்லை. சிலர் மேடையில் நின்றபடி குடிநீர் பாட்டில்களையும், ஸ்நாக்ஸ் பாக்கெட்களையும் தூக்கி வீசினர். அதை பிடிப்பதற்கு தொண்டர்கள் அலைமோதினர். இப்படி ஏற்பாடுகளில் கடும் சொதப்பல் ஏற்பட்டதை கேரவனில் அமர்ந்து டிவியில் பார்த்த விஜய் கடும் அதிருப்தி அடைந்து ஒருங்கிணைப்பாளர்களை கண்டித்துள்ளார்.

* கழிப்பறை தண்ணீரை குடித்த தொண்டர்கள்
மாநாட்டுக்கு காலையிலேயே ஏராளமானவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். திடலில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் கொண்டு வந்திருந்த குடிநீர் தீர்ந்து போனதும் தாகத்தால் பலரும் தவித்தனர். நேரம் ஆக ஆக வெயில் வறுத்தெடுக்க தொடங்கியதால் தண்ணீர், தண்ணீர் என்று பலரும் குரல் கொடுத்தனர். அவர்கள் தண்ணீர் கேட்டு கை ஏந்தினர்.

ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தண்ணீரைத் தேடி பலரும் அலைந்தனர். சிலர் கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீரை பிடித்து குடித்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகவே, ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து குடிநீர் ஏற்பாடு செய்யும்படி விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்பின் வாட்டர் பாக்கெட்களை கொண்டு வந்து மேடையிலிருந்து வீசினர்.

* கண் கலங்கிய விஜய்
சரியாக 4 மணிக்கு மாநாட்டு திடலில் தோன்றிய விஜய், நடுவே அமைக்கப்பட்ட ரேம்பில் நடந்து சென்றவாறு தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது அவர்கள் அன்போடு தூக்கி எறிந்த கட்சி துண்டுகளை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்ட விஜய் நன்றி தெரிவித்தார். அப்போது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் சீருடையில் குறுக்கே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ மரியாதைபோல் வணக்கம் செலுத்திவிட்டு அவர் சென்றார். பின்னர் பவுன்சர்களால் அவர் கீழே இறக்கப்பட்டார். அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து விஜய் கண்கலங்கினார்.

* 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் ஓயாத ஆம்புலன்ஸ் சத்தம்
காலை 10 மணிக்கே மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள், பெண்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு, கழிப்பிட வசதிகள் சீராக செய்யப்படவில்லை. 5 லட்சம் ஸ்னாக்ஸ், வாட்டர் பாட்டில்கள் தயாராக இருந்தும் உரிய நேரத்தில் கிடைக்காததால், கடுமையான வெயில் தாங்க முடியாமல் தலையில் நாற்காலியை வைத்தபடி பல மணி நேரம் ரசிகர்கள் காத்திருந்தனர். வெயில் தாங்க முடியாமல் பலர் சேர்களை தலையில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

வெயிலின் தாக்கத்தால் 120க்கும் மேற்பட்டோருக்கு மயக்கமடைந்தனர். இதில் சிறுவர்கள், முதியவர்கள் அதிகம். பலருக்கு வாந்தி, ஒவ்வாமை ஏற்பட்டது. பலர் சோர்வடைந்து திடலை விட்டு வெளியேறினர். சிலரை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டது. மாநாட்டு திடல் பின்பகுதியில் இரயிலில் இருந்து குதித்த 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

இவ்வாறு விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு, தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் 10 நிமிடத்திற்கு ஒரு முறை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தவாறு சென்றபடி இருந்தன. மேலும் சில ஆம்புலன்ஸ்கள் நெரிசல் காரணமாக செல்ல வழியின்றி சிக்கி பரிதவித்தன. இதனால் காலையில் தொடங்கிய ஆம்புலன்ஸ் குரல் மாலை வரையிலும் ஓயாமல் ஒலித்தபடி இருந்தது.

* மாநாட்டுக்கு வந்த 4 பேர் பலி
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த தவெக மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் (35), தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கலையரசன் (39) ஆகியோர் தலைமையில் 7 பேர் ஒரு காரில் தவெக மாநாட்டுக்கு நேற்று புறப்பட்டனர். காரை அஜய் (24) என்பவர் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை அடுத்த பாலிஷேக் உசேன்பேட்டை அருகே திடீரென கார் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனிவாசன் மற்றும் கலையரசன் உயிரிழந்தனர்.

காயமடைந்த அஜய் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநாடு நடந்தது திறந்தவெளி திடல் என்பதால் வெயிலின் தாக்கம் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரடைப்பில் உயிரிழந்தார்.

சென்னை பாரிமுனையை சேர்ந்த வசந்தகுமார்(20), நண்பரான ரியாசுடன்(17) பைக்கில் சென்றபோது, தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே மணல் லாரி மீது பைக் மோதி வசந்தகுமார் உயிரிழந்தார். ரியாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாம்பரம் சந்தோஷ்புரம் அருகே தவெக மாநாட்டுக்க சென்ற வேன் சாலை தடுப்பில் மோதியதில் டிரைவர் உட்பட 11 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

* கட்அவுட், பேனர்களில் ஏறிநின்ற ஆண், பெண் தொண்டர்கள்
மாநாடு தொடங்கி கலைநிகழ்ச்சிக்குப்பின் மேடைக்கு விஜய் வந்ததும், கட்அவுட், பேனர்களில் ஏராளமான தொண்டர்கள் ஏறி நின்றனர். பெண்களும் ஆண்களுக்கு இணையாக கட்அவுட்டில் எறி நின்றனர். உடனே பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மைக்கில் எல்லாரும் இறங்குங்கள்… இறங்குங்கள் என்று கெஞ்சிக் கொண்டே இருந்தார். சில நிமிடங்கள் அவர் கெஞ்சியும் கட்அவுட்டில் இருந்து இறங்கியபாடில்லை. கடைசியாக மற்ற தொண்டர்கள் தலையிட்டு அவர்களை கீழே இறக்கினர்.

* மாநாட்டு திடலில் சரக்கடித்த தொண்டர்கள் 2 மணி நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் எக்காரணத்தை கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, மது அருந்திவிட்டு வந்தால் மாநாட்டிற்குள் அனுமதி கிடையாது என்று கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், நேற்று மாநாடு திடலை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளில் தொண்டர்கள் மதுவாங்க முண்டியடித்தனர்.

குறிப்பாக விக்கிரவாண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி, விசாலை, கூட்டேரிப் பட்டு பகுதியில் உள்ள 4 டாஸ்மார்க் கடைகளில் திறந்த இரண்டு மணி நேரத்திலேயே ரூ.10 லட்சத்திற்கும் மேல் மதுபானம் விற்பனையாகி உள்ளது. மேலும் அங்குள்ள கடை வீதிகளில் சாலையில் அமர்ந்தவாறு சரக்கடித்து திறந்தவெளி பாராக மாற்றினர். உச்ச கட்டமாக மாநாட்டு திடலில் அமர்ந்து சிலர் வாங்கி வந்த மதுபாட்டில்களை திறந்து சாவகாசமாக ‘தண்ணி’ அடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

The post த.வெ.க. மாநாட்டு துளிகள் appeared first on Dinakaran.

Related Stories: