விமான நிலைய 2வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி படுகாயம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை விமான நிலைய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வதற்கான பணியில் விமான நிலைய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளில், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 2 என்ற, சென்னை சர்வதேச விமான முணையத்தின் 2வது தளத்தின் மேல் பகுதியில், வண்ண விளக்குகளை தொங்கவிடும் பணியில், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (26) என்ற கூலி தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் பணியில் இருந்த செல்வம், திடீரென தவறி, சுமார் 40 அடி உயரத்திலிருந்து தரையில் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வத்தை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆபத்தான நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயரமான கட்டிடத்தில் பணியில் இருக்கும் போது, அந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு கவசமாக தலையில் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.

அதோடு உயரத்தில் அந்தரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்திருக்க வேண்டும். ஆனால், செல்வம் எந்த பாதுகாப்பு உபகரணங்களு்ம அணியவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளாக வலைகள் கட்டியிருக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறை உள்ளன. ஆனால் இது போன்ற எந்த விதிமுறையும் அமல்படுத்தாமல், சென்னை விமான நிலைய அதிகாரிகள் அலட்சியத்தால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

The post விமான நிலைய 2வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: