விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக மாநாடு இன்று நடக்கிறது: நடிகர் விஜய் முதல்முறையாக அரசியல் சிறப்புரை: ஐஜி தலைமையில் 4,500 போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று நடக்கிறது. இதில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி ஐஜி தலைமையில் 4,500 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மாநாடு மேடைக்கு அருகில் ஒரு பக்கம் பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் மற்றும் மறுபக்கம் தமிழன்னை, மூவேந்தர்களான சோழர், சேரர், பாண்டியன் மற்றும் விஜய் கட் அவுட்களும், திடலுக்கான நுழைவாயிலில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், ஜார்ஜ் கோட்டை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு இரு பக்கமும் யானை இரு கால்களை தூக்கியபடி வரவேற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவாயிலில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன், ரிமோட் மூலம் அந்த கொடி கம்பத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கொடி ஏற்றி வைத்து முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்ற உள்ளார்.

மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு ஆடியோ லான்ச்சில் வருவது போல் நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜெனரெட்டர் வசதியுடன் கூடிய சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருபுறமும் எல்இடி பல்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி நேற்று முதலே தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து சென்றன. மாநாட்டிற்கு ஐ.ஜி அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷாமித்தல் தலைமையில் விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உள்ளிட்ட 10 எஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள், 150 இன்ஸ்பெக்டர்கள் என 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

* விஐபிக்களுக்கு கேரவன்
தவெக மாநாடு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றே மாநாட்டு திடலுக்கு விஜய் சென்றுவிட்டார். நேற்றிரவு மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் திரைத்துறை பிரபலங்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும், திரைத்துறையினர் உள்ளிட்ட விஐபிக்கள் தங்கவும் 6 கேரவன் வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கிடும் வகையில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிஸ்கட், மிக்சர், வாட்டர் பாட்டில் உள்ளடக்கிய சுமார் 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட் பேக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வழங்க உள்ளனர்.

The post விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக மாநாடு இன்று நடக்கிறது: நடிகர் விஜய் முதல்முறையாக அரசியல் சிறப்புரை: ஐஜி தலைமையில் 4,500 போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: