தங்கம் விலையில் மேலும் அதிரடி உயர்வு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது: தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை வாங்க காத்திருப்போர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை வாங்க காத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்று விற்பனையானது. 23ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.58,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. 24ம் தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7285க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58280க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது ஒருநாள் கூட நீடிக்கவில்லை.

நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,360க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,880 என்ற வரலாற்று புதிய உச்சத்தையும் தொட்டது. இப்படியே விலை உயர்ந்தால் வரும் திங்கட்கிழமைக்குள் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோர் இடையே ஏற்பட்டது. வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.

இந்த நேரத்தில் அலுவலகங்களில் வழங்கப்படும் போனஸ் பணத்தை பயன்படுத்தி நகைகளை வாங்குவதை நிறைய பேர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது அவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் போன்ற முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வரும் நிலையில், தங்கம் விலை உயர்வு அவர்களுக்கு மேலும் செலவை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர மக்களுக்கு தங்கமே மிகவும் எளிதான முதலீடாக உள்ளது. ஆனால், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் விலையால், தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு கடந்த மாதம், இந்த மாதம் என 2 மாதத்தில் தங்கம் விலை அதிகரித்து தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பங்குச் சந்தையில் தொடர்ந்து நிலவும் வீழ்ச்சி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என துறைசார் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தங்கம் விலையில் மேலும் அதிரடி உயர்வு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது: தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை வாங்க காத்திருப்போர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: