மீண்டும் மீண்டும் உயரும் தங்கம்; பவுன் ரூ.59,000ஐ நெருங்கியது: 10 மாதங்களில் பவுனுக்கு ரூ.11,000 உயர்வு

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தொடர்ந்து தங்கம் விலை படிப்படியாக எகிறத் தொடங்கியது. அதுவும், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் ஒரு ரூபாய் கூட தங்கம் விலை குறையவில்லை. கடந்த வாரம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.58ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை ஆனது. இந்நிலையில், புதன்கிழமையான நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,340-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, பவுன் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க எண்ணும் மக்கள், இல்லத்தரசிகள், நடுத்தரவர்க்கத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.47 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.11,000 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் செப்டம்பர் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் மீண்டும் உயரும் தங்கம்; பவுன் ரூ.59,000ஐ நெருங்கியது: 10 மாதங்களில் பவுனுக்கு ரூ.11,000 உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: