அதே நேரத்தில் டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு, ஒரு மர்ம இ-மெயில் தகவல் வந்துள்ளது. அதில், சென்னை உள்ளிட்ட 11 விமான நிலையங்களுக்கு சென்று கொண்டிருக்கும் 11 விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த டெல்லி அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட 11 விமான நிலையங்களுக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர். அந்த சமயம், கொச்சியில் இருந்து 117 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 4.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
இதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்தனர். அந்த கொச்சி விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாக, மாலை 3.50 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றனர். அதன்பின்பு வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, விமானம் முழுவதையும் பரிசோதித்தனர்.
ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே இது வழக்கம்போல் புரளி என்று தெரிய வந்தது. அதேபோல் மற்ற 10 விமான நிலையங்களிலும் நடந்த சோதனைகளிலும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே சமூக விரோத கும்பல் வழக்கம்போல் நேற்றும் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டு உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே கொச்சி- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தல் சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார், வழக்கம்போல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை வந்த இண்டிகோ உள்பட 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.