தீபாவளியையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை யொட்டி மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபாவளி பண்டிகையை யொட்டி டிஜிபிசங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் முக்கிய கடைவீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை தி.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குறிப்பாக 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சாதாரண உடையில் 15 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களும் கூட்ட நெரிசலில் மக்களோடு மக்களாக கண்காணித்து வருகிறார்கள். தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் மொத்தமாக 17 கண்காணிப்பு கோபுரங்களை போலீசார் அமைத்து உள்ளனர். அங்கிருந்தபடியே சுழற்சி முறையில் போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணித்து சந்தேக நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உஷார் படுத்துகிறார்கள். 19 இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

கூட்ட நெரிசலில் யாராவது மயங்கி விழுந்தால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்ல முறையான இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அது போன்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தீபாவளியை மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகையை யொட்டி மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

* தீபாவளி இனிப்பு வகைகள் 40% அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இனிப்பு, காரங்கள் விலை கடந்த ஆண்டை ஓப்பிடும் போது 40 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்க்கரை, எண்ணெய், நெய், நட்ஸ் வகை இனிப்புகளுக்கான முந்திரி, திராட்ைச, பேரிச்சம் பழம், பாதாம், பிஸ்தா போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே இதற்கு காரணம். ஒரு டின் நெய் ரூ.7500 ஆக இருந்தது, இது தற்போது 10 ஆயிரமாகவும், கிலோ ரூ.550க்கு விற்பனையான தரமான முந்திரி பருப்பு ரூ.850 ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரான் போரினால் உலர் பழங்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அதே வரிசையில் பாமாயில் விலையும் சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு லிட்டர் ரூ.97 ஆக இருந்த பாமாயில் இந்த வருடம் ரூ.127 ஆக உயர்ந்துள்ளது. ரூ.110 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெய் இப்போது ரூ.132 என்று கூடியுள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட குலாப் ஜாமூன் ரூ.520, காஜூகத்லி 100 கிராம் ரூ.106, பேடா 100 கிராம் ரூ.72, மைசூர் பாகு ரூ.78, காஜூ ரோல் ரூ.114, பாதுஷா ரூ.60 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் விலை அதிகரித்த போதிலும் ஆண்டுக்கு முறை தீபாவளி என்பதால் அதிக அளவில் வாங்கிய காட்சியை காண முடிந்தது. சிலர் கிலோ கணக்கில் வாங்குவதை தவிர்த்து தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி சென்றனர்.

The post தீபாவளியையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: