ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் சந்தையில் தீபாவளி எதிரொலி

ஒடுகத்தூர், அக்.26: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் தீபாவளி எதிரொலியாக ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. ஒரு ஜோடி ஆடுகள் ₹40 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வாரந்தோறும் ₹10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. கடந்த மாதம் முழுவதும் புரட்டாசி என்பதால் ஆட்டுச்சந்தை களையிழந்து வியாபாரமும் மந்தமாக நடந்தது.

தற்போது புரட்டாசி மாதம் முடிந்து வழக்கம்போல் நேற்று காலை ஆட்டுச்சந்தை கூடியது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனால், காலை 6 மணி முதலே சந்தையில் கூட்டம் களைகட்டியது. வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்தனர். வழக்கமாக சந்தைக்கு வெள்ளாடுகள் மட்டும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். ஆனால், நேற்று செம்மறி ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதனால், ஒரு ஆட்டின் விலை முன்பைவிட கிடுகிடுவென உயர்ந்து ₹20 ஆயிரத்துக்கும், ஒரு ஜோடி ஆடுகள் ₹40 முதல் ₹45 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த வாரம் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. தொடர் மழை மற்றும் புரட்டாசி மாதம் காரணமாக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வரவில்லை. ஆனால், தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று(நேற்று) நடந்த சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரிகளும் ஆடுகளை விற்று நல்ல லாபம் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். நேற்று ஒரேநாளில் ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது’ என்றனர்.

The post ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் சந்தையில் தீபாவளி எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: