வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 0.23 சதவீதம் என்ற அளவில் எச்.ஐ.வி தொற்று குறைந்துள்ளது: உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் பேச்சு

வேலூர், டிச.18: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 0.23 சதவீதம் என்ற அளவில் எச்ஐவி தொற்று குறைந்துள்ளதாக உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார். உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ம் நாள் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் உரிமைப் பாதையில் என்ற மைய கருத்தின் அடிப்படையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில், எச்.ஐ.வி,எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி, உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்தல், கையெழுத்து முகாம், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சமபந்தி போஜனம் ஆகிய நிகழ்ச்சியில் கலெக்டர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலுவலர் சித்ரா வரவேற்றார்.

தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு சமுதாய சுகாதார நிலையங்கள் மற்றும் ஒரு நடமாடும் நம்பிக்கை மையம் என 34 இடங்களில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள், நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இதுவரை 18 லட்சத்து 114 நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18.385 நபர்கள் எச்.ஐ.வி நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டது. இந்த 2024ம் ஆண்டில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 268 நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 365 பேர் எச்ஐவி நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டது. 2001ம் ஆண்டில் 5.3 சதவிகிதம் என்ற அளவில் இருந்து தற்போது 2024ம் ஆண்டில் 0.23 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. மேலும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 8 லட்சத்து 26 ஆயிரத்து 133 மொத்த கர்ப்பிணி பெண்களில், 1,435 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.பி. தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 2024ம் ஆண்டில் 35,298 நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டது. இதில் 6 கர்ப்பிணி பெண்கள் பிரசவம் நடைபெற்றுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்கு எதிரான கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் 18,943 நபர்கள் பதிவு செய்யப்பட்டு கூட்டு மருந்து உட்கொண்டு வருகிறார்கள். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் 2030ம் ஆண்டுக்குள் புதிய எச்.ஐ.வி. தொற்று பூஜியம் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. 95 சதவீதம் மக்கள் தன்னுடைய. நிலையை அறிந்திருக்க வேண்டும். 95 சதவீதம் எச்.ஐ.வி. தொற்று எனக்கண்டறிந்தவர்கள் எஆர்டி மையத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். ஏஆர்டி மையத்தில் பதிவு மேற்கொண்டவர்கள் 95 சதவீதம் மாத்திரை எடுத்து கிருமி எண்ணிக்கை பரிசோதனை செய்திருக்க வேண்டும். இலக்கை நோக்கி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு பணியினை மேற்கோண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 0.23 சதவீதம் என்ற அளவில் எச்.ஐ.வி தொற்று குறைந்துள்ளது: உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: