வேலூர், டிச.18: கொலை வழக்கு விசாரணைக்காக வேலூர் கோர்ட்டில் ரவுடிகள் வசூர்ராஜா, ஜானி நேற்று ஆஜராகினர். காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி. வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் ரவுடி ராஜா என்கிற வசூர்ராஜா. பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜானி கடலூர் ஜெயிலிலும், வசூர்ராஜா கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் ஜானி, வசூர்ராஜா ஆகியோர் தொடர்புடைய லத்தேரி அருகே நடந்த கொலை வழக்கு ஒன்று வேலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி கடலூரில் இருந்து ஜானியும், கோவையில் இருந்து வசூர்ராஜாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் வேலூர் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் பலத்த காவலுடன் அந்தந்த சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
The post வேலூர் கோர்ட்டில் ரவுடிகள் வசூர்ராஜா, ஜானி ஆஜர் appeared first on Dinakaran.