அணைக்கட்டு, டிச. 18: அணைக்கட்டு அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் ஊனை ஏரி மீண்டும் நிரம்பியது. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை கிராமத்தில் ஊனை ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதால் கன மழை பெய்தாலும் தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயல், கனமழையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊனை வாணியம்பாடி ஊராட்சி நாராயணபுரம் ஏரி நிரம்பி கோடி போனது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீர், நீர் வரத்து கால்வாய்கள் வழியாக இந்த ஏரிக்கு வந்து தண்ணீர் நிரம்பி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று இந்த ஏரி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரம்பி கோடி போனது.
இருப்பினும் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் ஏரி நிரம்பி கோடிப்போகும் இடம் மற்றும் கால்வாய்களில் செடி, கொடிகள் முளைத்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே இந்த ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை சரி செய்து, ஏரியின் மதகுகளை சீரமைத்து ஏரிகோடி போகும் இடத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் உத்தரவின்படி ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சரி செய்யப்பட்டதன் விளைவாக தற்போது ஒவ்வொரு ஏரிகளாக நிரம்பி வருகிறது. ஊனை ஏரி நிரம்பியதை தொடர்ந்து வசந்தநடை ஏரிக்கு நீர் திருப்பிவிடப்பட்டு ஏரி நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
The post அணைக்கட்டு அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் ஊனை ஏரி மீண்டும் நிரம்பியது ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.