பாரமுல்லாவில் ராணுவ வீரர்கள் வீரமரணம் : ராகுல்காந்தி இரங்கல்

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாத்தலத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போடாபத்ரி என்ற இடத்தில், ராணுவ வாகனத்தைக் குறி வைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ராணுவத்தில் சுமை தூக்கும் பணியை மேற்கொண்டிருந்த கிராமத்தினர் 2 பேரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் 3 வீரர்கள் மற்றும் 2 சுமை தூக்கும் பணியாளர்கள் காயமுற்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாத குழுக்களாக இருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தத் தாக்குதல் துரதிருஷ்டவசமானது என்று கூறிய ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் முடிந்து கடந்த 16ம் தேதி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதிலிருந்து, நேற்று வரை நான்காவது முறையாக தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* ராகுல்காந்தி இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் இரண்டு போர்ட்டர்களும் உயிரிழந்தனர். தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துவதுடன், உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. அவர்களின் கூற்றுகளுக்கு மாறாக, பயங்கரவாத நடவடிக்கைகள், நமது வீரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து கொல்லப்படுவதால், அரசு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என்பதே உண்மை.

The post பாரமுல்லாவில் ராணுவ வீரர்கள் வீரமரணம் : ராகுல்காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: