இலங்கை கடற்படை கைது செய்த 16 ராமேஸ்வரம் மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள், இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (23ம் தேதி) கைது செய்யப்பட்டுள்ளனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோர பகுதிகளில் வாழும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடி படகுகளையும் விரைந்து விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொள்ள வேண்டும். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்த பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வு கொண்டுவரும் என நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை கடற்படை கைது செய்த 16 ராமேஸ்வரம் மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: