பொள்ளாச்சியில் நடைபெறும் பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் செங்கல்பட்டு, மதுரை மற்றும் கோவையில் பலூன் திருவிழா நடதப்படவுள்ளன. கடந்தாண்டு நடந்த திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்ற நிலையில், விதவிதமான உருவங்களில் பறக்கும் பலூன்கள் கண்டு வியந்ததுடன், மக்களும் அதில் ஏறி பயணம் செய்தனர். மேலும் பலூன் திருவிழா நடைபெறும் தேதியை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 10ம் தேதி முதல் 19ம் தேதி நடைபெற உள்ளது என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழ்நாடு 10வது ஆண்டு பலூன் திருவிழாவை சுற்றுலாத்துறையுடன் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்த உள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை மூன்று இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி செங்கல்பட்டு ஈசிஆர் சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஜனவரி 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வரும் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் பலூன் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையில் 18ம் தேதி முதல் 19ம் தேதி வரை என மூன்று இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் பலூன் பறப்பதை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவில் தாய்லாந்து, பெல்ஜியன், ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகளின் வெப்ப காற்று பலூன்கள் தமிழகத்தில் குவிய உள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
கடந்தாண்டை போலவே டைனோசர், திமிங்கலம், மிக்கி மவுஸ், காமிக்ஸ்களில் வரும் கதாபாத்திரங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் பலூன்கள் பறக்க விடப்படுகிறது. 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட ஒவ்வொரு பலூன்களும் வெப்ப காற்று நிரப்படும். பலூனில் பறக்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் பலூனை தேர்ந்தெடுத்து பறக்கலாம். தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். ஒரு பலூனில் மூன்று பேர் வரை பறக்கலாம். இதில் பறக்க ஒருவருக்கு ரூ.25,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பலூன் திருவிழா நடைபெறும் பகுதியில் உணவு கூடங்கள், குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பொங்கல் பண்டிகையையொட்டி செங்கல்பட்டு உட்பட 3 மாவட்டங்களில் 10ம் தேதி முதல் பலூன் திருவிழா: 12 நாடுகளை சேர்ந்த ராட்சத வெப்ப காற்று பலூன்கள் இடம் பெறுகிறது; சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.