4 மாதங்களாக ஆய்வு நடத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறோம் சென்னையில் ஒரே நாளில் மழை சுவடு இல்லாமல் ஆக்கியது அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

திருவண்ணாமலை: ‘நான்கு மாதங்களாக தொடர் ஆய்வு நடத்தி, வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றிருக்கிறோம். சென்னையில் மழை பெய்த ஒரே நாளில் அதன் சுவடு இல்லாமல் ஆக்கியது திமுக அரசு’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 860 ஊராட்சிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சிகள் என மொத்தம் 1480 கிராம ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு உபரணங்கள் அடங்கிய தொகுப்பினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 478 மகளிர் குழுக்களுக்கு ரூ.41.42 கோடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 184 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.05 கோடி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 141 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.58 கோடி என மொத்தம் 803 குழுக்களுக்கு ரூ.78.05 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:

இது, கடந்த 16ம் தேதி நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி. சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் இப்போது நடக்கிறது. சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக, வடசென்னையில் 30 செமீ வரை மழை பெய்தது. ஆனால், மழை பெய்த ஒரே நாளில், இரண்டாவது நாளில் அதன் சுவடே இல்லாமல் ஆக்கியதுதான் திமுக ஆட்சி. முதல்வரின் உத்தரவின் பேரில், கடந்த 4 மாதங்களாக ஆய்வு நடத்தி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை காப்பாற்றியதற்கு முழு காரணம் முதல்வரும், திராவிட மாடல் ஆட்சியும்தான்.

அடுத்து வரும் மழை நாட்களிலும் மக்களை காக்கும் பணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அதில் ஒவ்வொரு துறைகளில் உள்ள திட்டங்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* திருவண்ணாமலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி ஸ்டேடியம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில், சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, ரூ.10 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார். எனவே, விரைவில் பணிகள் தொடங்கி திருவண்ணாமலையில் ஒரு ஆண்டுக்குள் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் அமையும். விளையாட்டு வீரர்கள் வாழ்வில் உயரம் தொட திராவிட மாடல் அரசு துணை நிற்கும்’ என்றார்.

The post 4 மாதங்களாக ஆய்வு நடத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறோம் சென்னையில் ஒரே நாளில் மழை சுவடு இல்லாமல் ஆக்கியது அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: