நான் முதல்வன் திட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பயிற்சி அரசு கல்லூரிகளின் பேராசிரியர்கள் குழுவினர் சென்னை திரும்பினர்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தில் ஆஸ்திரேலியாவில் 3 வாரம் பயிற்சி பெற்ற தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் பேராசிரியர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் பேராசிரியர்கள் குழுவை, தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு துறை அதிகாரிகள் வரவேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல், கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் ஆகியவற்றில் பேராசிரியர்களாக பணியாற்றும் 15 பேராசிரியர்களை தேர்வு செய்து, ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் உள்ள பீனிக்ஸ் அகாடமியில் 3 வாரங்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆஸ்திரேலியாவில், தொழிற் கல்வி பயிற்சி திட்டத்தில், தங்களுடைய பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பேராசிரியர்கள், 15 பேர் கொண்ட குழுவினர், ஆஸ்திரேலியா பெர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சிங்கப்பூர் வழியாக நேற்று காலை 10.30 மணி அளவில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.

பேராசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை சார்பில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து, இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. தொழில் கல்வி முறைக்கு எப்படி, உலகளாவிய அளவில் இருக்கும் அறிவுகளை பயன்படுத்தலாம். அந்த நாடுகளில் எப்படி மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கிறார்கள் என்பது குறித்து, பேராசிரியர்களாகிய எங்களுக்கு, பயிற்சியாளர்கள் விரிவாக பயிற்சிகள் அளித்தனர்’’ என்றனர்.

The post நான் முதல்வன் திட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பயிற்சி அரசு கல்லூரிகளின் பேராசிரியர்கள் குழுவினர் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: