திருச்சி விமானம் உட்பட பல்வேறு குளறுபடி முறையாக பராமரிக்க முடியாவிட்டால் ஏர் இந்தியாவை திரும்பப் பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்

சென்னை: திருச்சி மற்றும் டெல்லி விமானத்தில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமான டாடா குழுமத்தால் ஏர் இந்தியாவை முறையாக பராமரிக்க முடியாவிட்டால், ஒன்றிய அரசே ஏர் இந்தியாவை திரும்பப் பெற வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன், ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு எழுதி உள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு, பொதுப் பணித்துறையாக இருந்த ஏர் இந்தியாவின் கடனில் ரூ.61,000 கோடியை அடைத்து, பின் ‘டாடா’ குழுமத்திற்கு வெறும் ரூ.18,000 கோடிக்கு விற்றது. இந்தப் பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் போது, அதன் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை மேம்படுத்தப்படும் என பாஜ அரசு உறுதியளித்தது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாக உள்ளது. சமீபத்தில், திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட IX 613 என்கிற ஏர் இந்தியா விமானம், அதில் பயணித்த பயணிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறு காரணமாக விமானம் சார்ஜாவுக்கு பயணிக்க முடியாமல் 2 மணி நேரத்திற்கு, மேலாக 141 பயணிகளுடன் வானிலேயே வட்டமிட்டது. வானில் ஏற்பட்ட இந்த அவசர நிலையால், ஒட்டு மொத்த மாநிலமுமே பயத்தில் உறைந்தது. நல்லவேளை, விமானி அந்த விமானத்தை மீண்டும் திருச்சி­யிலேயே தரையிறக்கினார். இந்த சம்பவத்தின் மூலம், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பராமரிப்புத் தரநிலைக் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

டாடா குழுமத்தின்கீழ் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கையாண்டு தவறுகள் செய்து வருகிறது என பல ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுபோன்ற அவர்களின் தொடர் அலட்சியங்களைப் பார்த்தால் பெயரளவிலான அபராதத்தை மட்டுமே செலுத்திவிட்டு தொடர்ந்து மெத்தனப்போக்கையே கையாள்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறதே தவிர அந்தத் தவறுகளை அந்நிறுவனம் சரிசெய்வதே இல்லை என்பதை ஒரு ஊடக அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஏர் இந்தியாவின் பழமையான விமானங்களால், அதன் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கைமாறுவதற்கு முன்பு பல்வேறு புதிய விமானங்களில் இருந்து உதிரிபாகங்களை பழைய விமானங்களுக்கு பொருத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 40 கோடி டாலர் மதிப்பீட்டில், மறுசீரமைப்பை அறிவித்திருந்தாலும், மறுசீரமைப்புப் பணிகள் மெத்தனமாகவே நடைபெறுகிறது என பல ஊடகங்களில் செய்தி வருகின்றன.

இதுபோன்ற பழமையான விமானங்களால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நெடுந்தூர பயணத்தில் தொடர் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து இதேபோல் இப்பிரச்னைகள் நீடிக்குமானால் நாட்டின் நலன் கருதி ஏர் இந்தியாவின் தனியார்மையமாக்கல் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன். தேவையான அளவு பாதுகாப்பு மற்றும் செயல்திறனோடு விமானம் செயல்படுவதை உறுதி செய்வதற்காக விமானத்தின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post திருச்சி விமானம் உட்பட பல்வேறு குளறுபடி முறையாக பராமரிக்க முடியாவிட்டால் ஏர் இந்தியாவை திரும்பப் பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: