நடிகை ரம்யா பாண்டியன் காதல் திருமணம்: பஞ்சாப் யோகா மாஸ்டரை மணக்கிறார்


சென்னை: நடிகை ரம்யா பாண்டியன், யோகா மாஸ்டர் காதல் திருமணம் ரிஷிகேஷில் நடக்கிறது. தமிழில் ‘மானே தேனே பொன்மானே’ குறும்படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் (34), பிறகு ‘ரா… ரா… ராஜசேகர்’, ‘டம்மி டப்பாசு’, ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்தார். பிறகு டி.வி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், வெப்தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்தார். தற்போது ‘தேன்’ கணேஷ் விநாயக், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் இயக்கத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இவர், நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர் மறைந்த இயக்குனர் சி.துரைபாண்டியனின் மகளாவார். அருண் பாண்டியன், வினிதா நடித்த ‘ஊழியன்’ படத்தை அவர் இயக்கியிருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படித்த ரம்யா பாண்டியன், வணிக மேம்பாட்டு மேலாளராகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராகப் பணியாற்றினார். கடந்த ஆண்டு யோகா பயிற்சி பெறுவதற்காக, பெங்களூரு வாழும் கலை ரவிசங்கர் ஆஸ்ரமத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார்.

அங்கு இண்டர்நேஷனல் டீச்சிங் யோகா மாஸ்டராகப் பணியாற்றும் லோவெல் தவான் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பிறகு அவரைக் காதலித்தார். இதையடுத்து அவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். மணமகன் லோவெல் தவான், பஞ்சாப் லூதியானாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பப்ளிக் லேபரட்டரியின் உரிமையாளராகவும் இருக்கிறார். ரம்யா பாண்டியன், லோவெல் தவான் காதல் திருமணம், ரிஷிகேஷில் கங்கை நதி பாயும் கோயிலில், வரும் நவம்பர் 8ம் தேதி நடக்கிறது. மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, வரும் நவம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத்துக்குப் பிறகும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

The post நடிகை ரம்யா பாண்டியன் காதல் திருமணம்: பஞ்சாப் யோகா மாஸ்டரை மணக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: