சென்னையில் 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: கனமழையிலும் சாதித்த தூய்மைப் பணியாளர்கள்

சென்னை: சென்னையில் 2 நாட்கள் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கி நின்ற தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். 77 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு படை வீரர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனே வெட்டி அகற்றினர். மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி, புதை மின்வடம் பதிக்கும் பணி உள்ளிட்ட பணிகளால் சென்னை மாநகரிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.

வெள்ள நீரை அகற்றும் பணியில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டதன் எதிரொலியாக ஒரே நாளில் சென்னை மீண்டது.  அதே நேரம், சென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் கால்வாய்கள், சாக்கடைகளில் இருந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குப்பை கழிவுகள் சாலை ஓரம், தெருக்களில் குவிந்து கிடந்தன. ஏற்கனவே தூய்மைப்பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை அழைத்து வந்திருந்தது.

அவர்கள் இரவு, பகல் பாராமல் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரால் அடித்து வரப்பட்ட குப்பையை சுத்தப்படுத்தி அவற்றை அள்ளும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். அதன் எதிரொலியாக சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் தூய்மைப் பணியாளர்கள் பிரித்து அனுப்பப்பட்டு குப்பையை அள்ளி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர். சென்னையில் கனமழை பெய்த கடந்த 3 நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன், 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பை என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: கனமழையிலும் சாதித்த தூய்மைப் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: