தொடர் விபத்தால் அதிரடி மாற்றம் ரயில்வே வாரியத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்: மனிதவளம், பாதுகாப்பு பிரிவுக்கு புதிய இயக்குனர்கள் நியமனம்

புதுடெல்லி: ரயில்வேயில் நடக்கும் தொடர் விபத்தை தொடர்ந்து ரயில்வேயில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து மூன்றாம் முறையாக பதவி ஏற்ற பிறகு ரயில்விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது ஒன்றிய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ரயில்வேயில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தில் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு இயக்குநர் ஜெனரல்களை நியமிக்க ரயில்வே அமைச்சகம் செய்த பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:
ரயில்வே மூத்த அதிகாரி பிரஜ் மோகன் அகர்வால், ரயில்வே வாரிய உறுப்பினராக (டிராக்ஷன் மற்றும் ரோலிங் ஸ்டாக்) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரயில்வே மனிதவள இயக்குனராக இருந்த நவீன் குலாட்டிக்கு ரயில்வே வாரிய உறுப்பினராக (உள்கட்டமைப்பு) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே உள்கட்டமைப்பு வாரிய உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் கடந்த செப்டம்பர் 30ல் ஓய்வு பெற்ற பிறகு காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு நவீன் குலாட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காலியாக உள்ள ரயில்வே மனித வளம் இயக்குனராக மூத்த அதிகாரி ஆர் ராஜகோபாலை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு மூத்த அதிகாரியான ஹரி ஷங்கர் வர்மாவுக்கு ரயில்வே பாதுகாப்பு இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனித வளம் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் பதவிகள், பாதுகாப்பான ரயில் இயக்கத்திற்கு முக்கியமானவை. சிக்னல், தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் போன்ற முக்கியமான துறைகள் இவற்றின் கீழ் வருகின்றன. அடிக்கடி ரயில்விபத்துக்கு காரணமான துறைகளும் இவைதான். இதையடுத்து இந்த 2 துறைகளுக்கும் புதிய இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு புதிய சிறப்பு செயலாளர்

மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் வஷிஸ்தா உள்துறை அமைச்சகத்தின்(உள்நாட்டு பாதுகாப்பு) சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த 1991ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் வஷிஸ்தா தற்போது உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார். தற்போது உள்நாட்டு பாதுகாப்பு துறை சிறப்பு செயலாளராக உள்ள சிவகாமி சுந்தரி நந்தா டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் பதவியேற்கும் பிரவீன் வஷிஸ்தா வரும் 2026ம் ஆண்டு ஜூலை வரை பதவியில் இருப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் விபத்தால் அதிரடி மாற்றம் ரயில்வே வாரியத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்: மனிதவளம், பாதுகாப்பு பிரிவுக்கு புதிய இயக்குனர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: