மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். விழாவில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீரில் புதிய ஆட்சி அமைந்ததன் மூலம் மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2016ல் பாஜ-பிடிபி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின் 2019ல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாக மாநிலம் பிரிக்கப்பட்டது. இதன் பின், 10 ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

இதில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றின. பாஜ 29 இடங்களில் வென்றது. மக்களால் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. புதிய முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, புதிய அரசு பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், உமர் அப்துல்லா புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக, உமர் அப்துல்லா, ஸ்ரீநகரின் ஹஸ்ரத்புல் தர்காவில் தொழுகை நடத்திய பின் பதவியேற்பு விழாவுக்கு வந்தார். அவருடன் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததால் புதிய அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அங்கம் வகிக்கவில்லை. ஆனாலும், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி கட்சி தலைவர்கள் பிரகாஷ் காரத், டி.ராஜா, திமுக எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மற்றும் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், உமர் அப்துல்லா குடும்பத்தினரான அவரது தந்தையும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, தாயார் மோலி அப்துல்லா, 2 சகோதரிகள், 2 மகன்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஏற்கனவே உமர் அப்துல்லா, கடந்த 2009 முதல் 2014 வரை காஷ்மீர் முதல்வராக இருந்துள்ளார். தற்போது 2வது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். சாலை மார்க்கமாக பயணிக்கும் போது தனக்காக போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை சிரமப்படுத்தக் கூடாது என முதல்வராக தனது முதல் உத்தரவாக உமர் அப்துல்லா நேற்று பிறப்பித்துள்ளார்.

* இந்து மதத்தை சேர்ந்தவர் துணை முதல்வராக தேர்வு
உமர் அப்துல்லா ஆட்சியில் காஷ்மீரின் துணை முதல்வராக ஜம்முவைச் சேர்ந்த சுரேந்தர் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 அமைச்சர்களில் ஒருவராக இவரும் உமர் அப்துல்லாவுடன் நேற்று பதவியேற்றார். சவுத்ரி ஜம்மு பிராந்தியத்தின் குரலாக இருப்பார் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதே தனது நோக்கம் என்றும் பதவியேற்பின் போது முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டார். நவ்ஷீரா தொகுதியில் போட்டியிட்ட சுரேந்தர் சவுத்ரி 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜ தலைவர் ரவிந்தர் ரெய்னாவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பிடிபி, பாஜ கட்சிகளில் இருந்த சவுத்ரி கடந்த ஆண்டு ஜூலையில் தேசிய மாநாட்டு கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் மோடி வாழ்த்து
காஷ்மீரின் புதிய முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் நேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக புதிய அரசுடன் ஒன்றிய அரசு நெருக்கமாக இணைந்து செயல்படும் என உறுதி அளித்துள்ளார்.

* மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பார்
தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுத்து தருவதே புதிய அரசின் முதல் முன்னுரிமை. இது சவால்கள் நிறைந்த மாநிலம். தேர்தல் அறிக்கையில் கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் புதிய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற, உமருக்கு அல்லா துணை நிற்பார்’’ என்றார். மாநில அந்தஸ்தை மீட்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார்.

* உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றுள்ளதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கண்காணிப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்ற குழு தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவிக்க அனுப்பி வைத்தேன். இந்திய துணை கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரூம் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயக போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்! இவ்வாறு கூறியுள்ளார்.

The post மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: