வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

குன்னூர் : வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழை பாதிப்புக்களை எதிர்கொள்ள குன்னூர் நெடுஞ்சாலைத் துறையினர் 5 ஆயிரம் மணல் மூட்டைகள், ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆண்டு தோறும் வட கிழக்கு பருவமழையின்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மரங்கள் விழுவது, சாலையோர தடுப்பு சுவர் இடிந்து விழுவது, பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கும். மேலும், ஊட்டி – குன்னூர், குன்னூர் – மேட்டுப்பாளையம், ஊட்டி – கோத்தகிரி ஆகிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டம் துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக, குன்னூர் பகுதிகளில் இந்த மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை நீலகிரியில் தீவிரம் அடைவதற்கு முன், முன் எச்சரிக்கையாக அனைத்து துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே பாதிப்பு அதிகமாக ஏற்படும் இவ்விரு துறைகளும் வடகிழக்கு பருவமழையின்போது தயார் நிலையில் இருக்கும். குறிப்பாக, மழை பாதிப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் இருப்பது வழக்கம். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தற்போது அதனை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக, குன்னூர் பகுதியில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குன்னூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலக வளாகத்தில் மற்றும் காட்டேரி பகுதியில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், உடனுக்குடன் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள், வேன், மரம் அறுக்கும் கருவிகள், ஆகியனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களையும் தயார் நிலையில் இருக்க நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து குன்னூர் உட்கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் பாதிப்புகள் சற்று அதிகம் காணப்படும். குறிப்பாக, குன்னூர் பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். சாலையோர தடுப்பு சுவர்கள் இடிந்து விழுவது சாலையில் விரிசல் ஏற்படுவதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதுபோன்ற சமயங்களில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தால், அவைகள் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கு தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்படும். இதற்காக, 5 ஆயிரம் மணல் மூட்டைகள் குன்னூர் உட்கோட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மரங்கள் விழுந்தாலும் உடனுக்குடன் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைக்க 10 மரம் அறுக்கும் இயந்திரங்களும், அதற்கு தேவையான பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மண் சரிவு ஏற்பட்டால், அதனை அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்’’ என்றனர்.

The post வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: