பூதப்பாண்டி அருகே பரபரப்பு; நாய்களை குத்தி கிழித்த முள்ளம்பன்றி


பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே கடிக்க முயன்ற நாய்களை முள்ளம்பன்றி தனது முட்களால் குத்தி கிழித்ததில் 2 நாய்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாய்கள் சாப்பிடகூட முடியாமல் திண்டாடி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாடகை மலையடிவாரத்தையொட்டி ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள செண்பகராமன்புதூர், சிதம்பரபுரம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஒருபோக விவசாய பணிகள் நடக்கிறது. சமீபகாலமாக போதிய மழை இல்லாதது, பருவநிலை மாறுபாடு காரணமாக சிதம்பரபுரம், பெரியகுளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடுவதற்கு பதிலாக செங்கல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆகவே பல விவசாய நிலங்கள் பயனற்று கிடக்கின்றன. அவற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கின்றன. மலையடிவாரம் என்பதால் அடிக்கடி யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான விலங்கள் தண்ணீர், இரைதேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடுகின்றன. அவ்வப்போது மக்களையும் தாக்கிவிடுகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பூதப்பாண்டி அருகே சிதம்பரபுரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே காட்டு முள்ளம்பன்றி ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்டதும் அந்த வழியாக கும்பலாக உலாவிய நாய்கள் முள்ளம்பன்றியை ஓட ஓட விரட்டின. ஆனால் தற்காப்பில் சிங்கத்தையே அலறவிடுவதில் கில்லாடியான முள்ளம்பன்றி தப்பி ஓடுவதுபோல நாய்களை மலையடிவாரத்துக்கு அழைத்து சென்றது. பின்னர் திடீரென சிலிர்த்துக்கொண்டு தனது உடம்பில் உள்ள முட்களை வைத்து ஆக்ரோஷமாக நாய்களை திரும்ப தாக்கியது. சுழன்று சுழன்று முள்ளம்பன்றி தாக்கியதில் நாய்களின் உடம்பில் சரமாரி கீறல்கள் விழுந்தது. அதிலும் 2 நாய்களின் உடம்பில் முட்கள் சொருகிக்கொண்டன. ஒரு நாயின் நிலை மேலும் பரிதாபம். அந்த நாயின் வாய், காது, தொண்டை பகுதியில் முட்கள் சொருகிக்கொண்டன. வலியால் துடிதுடித்த நாய் கத்தவும் முடியாமல், முட்களை எடுக்கவும் முடியாமல் மரண ஓலமிட்டது. உடனே நாய் தனது எஜமானரின் வீட்டை நோக்கி ஓடியது. நாயின் நிலையை கண்ட வீட்டின் உரிமையாளர், உடனே நாயின் உடம்பில் குத்தியிருந்த முட்களை லாவகமாக எடுத்துவிட்டார்.

அதேபோல் அந்த பகுதி மக்கள் மற்ற நாய்களின் உடம்பில் குத்தியிருந்த முட்களையும் எடுத்துவிட்டனர். மேலும் அதன் காயங்களுக்கு மருந்தும் போட்டனர். ஆனாலும் காயம் சரியாக 3 நாட்களாவது ஆகிவிடும் என்பதால் அதுவரை அந்த நாய்களால் எதையும் கடித்து உண்ண முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முள்ளம்பன்றி மூர்க்கமாக தாக்கும் தன்மையுடையது. தற்போது குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. அதனை விரட்ட முயன்ற நாய்களுக்கே இந்த கதி என்றால், சிறு குழந்தைகள், வயதானவர்களை முள்ளம்பன்றி கடுமையாக தாக்கிவிடும். எனவே வனவிலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூதப்பாண்டி வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பூதப்பாண்டி அருகே பரபரப்பு; நாய்களை குத்தி கிழித்த முள்ளம்பன்றி appeared first on Dinakaran.

Related Stories: