பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு; பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி துவக்கம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

* 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28ல் தொடங்கும்
* மே 9 மற்றும் 19ல் ரிசல்ட்

கோவை: தமிழ்நாட்டில் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். இதன்படி பிளஸ் 2 தேர்வுகள் வருகிற மார்ச் 3ம் ேததியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28ம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் ேததியும், 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதியும் நிறைவடைகிறது. இதேபோல் செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன், தேர்வுகளுக்கான முடிவுகள் (ரிசல்ட்) வெளியாகும் தேதிகளையும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 ரிசல்ட் மே 9ம் தேதியும், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புக்கான ரிசல்ட் மே 19ம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வரை பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் நலன் கருதியும், தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராக வசதியாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான அட்டவணையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை கோவையில் வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக நிலைமைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்.

எனவே, மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. தேர்வை மனதில் வைத்து, மாணவர்கள் முழுமையாக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இதற்கு எந்த தடை வந்தாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு என்று நடப்பாண்டில் ₹44 ஆயிரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் பொதுத்தேர்வுகளுக்கு உடனடியாக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது என்பதால், சோர்வு அடையக் கூடாது. எவ்வித பதற்றமும் அடையாமல் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும். பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவு பெறுகிறது.

பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ல் நிறைவு பெறும். 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி நிறைவடையும். செய்முறை தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி நிறைவு பெறுகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி நிறைவு பெறும். 10ம் வகுப்புக்கு 22ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவுபெறும். இதே போல தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, பிளஸ் 2 ரிசல்ட் மே 9ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புக்கான ரிசல்ட் மே 19ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு; பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி துவக்கம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: