சங்கரன்கோவிலில் 4 மணி நேரத்துக்கு மேலாக கனமழை சங்கரநாராயணசுவாமி கோயிலில் மழை நீர் புகுந்தது

 

சங்கரன்கோவில்,அக்.14: சங்கரன்கோவிலில் 4 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சங்கரநாராயண சுவாமி கோயிலில் மழை நீர் புகுந்தது. இதனால் தண்ணீரில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் திடீரென கனமழை பெய்தது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் தேங்கிய மழை நீருக்குள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து தேங்கிய மழை நீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் கோயில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் செய்தனர். சங்கரன்கோவிலில் எப்போது மழை பெய்தாலும் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் பக்தர்கள் சுவாமி-அம்பாளை தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இனிவருங்காலங்களிலாவது கோயிலில் மழை நீர் புகுவதை தடுக்கவும், கோயிலில் இருந்து மழை நீர் வெளியேறுவதற்கு போதுமான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் புகுவதால் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சங்கரன்கோவிலில் 4 மணி நேரத்துக்கு மேலாக கனமழை சங்கரநாராயணசுவாமி கோயிலில் மழை நீர் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: