புதுக்கோட்டை, ஜன. 14: கடல் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனமாக உள்ளது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அவைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான கடலோர பகுதியில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் 30 வரையிலான காலக்கட்டத்தில் கடல் ஆமைகளை இனப்பெருக்கத்திற்கு கடற்கரையோர பகுதிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம், பொன்னகரம், கீழக்குடியிருப்பு மற்றும் கட்டுமாவடி பகுதியில் கடற்பசு அதிகமாக காணப்படும் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் கடற்பசு பாதுகாப்பு பகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களிலுள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடற்பசு எதிர்பாராவிதமாக பிடிப்பட்டால் அவைகளை உடனடியாக கடலிலே திரும்ப விட்டு விட வேண்டும்.
அவ்வாறு கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை பாதுகாத்தல் தொடர்பாக, தனது வலையில் பிடிபடும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை மீண்டும் கடலிலே பாதுகாப்பாக விட்டு அதன் விவரத்தினை தெரிவித்தால் அதன்படி வனத்துறைக்கு பரிந்துரை செய்து சம்மந்தப்பட்ட மீனவருக்கு வனத்துறையின் மூலம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடற்கரை பகுதியில் ஒதுங்கும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை கடலிலே திரும்ப விடவும், அறிவுறுத்தப்படுகிறது.
