பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அதிரடி வெற்றி

முல்தான்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. முல்தான் கிரிக்கெட் அரங்கில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன் குவித்தது (149 ஓவர்). அப்துல்லா 102, கேப்டன் ஷான் மசூத் 151, சவுத் ஷகீல் 82, சல்மான் ஆஹா 104* ரன் விளாசினர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன் (322 பந்து, 29 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 262 ரன் (375 பந்து, 17 பவுண்டரி), டக்கெட் 84, கிராவ்லி 78 ரன் விளாசினர்.

இதையடுத்து, 267 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 220 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சல்மான் ஆஹா 63, ஆமிர் ஜமால் 55*, ஷகீல் 29, அயூப் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் 4, கார்ஸ், அட்கின்சன் தலா 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். முச்சதம் விளாசிய ஹாரி புரூக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் முல்தானில் நாளை மறுநாள் தொடங்குகிறது (அக்.15).

The post பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அதிரடி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: