தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் அழைப்பு

 

திருவள்ளூர், அக். 9: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி இணையதளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலுள்ள (https://www.ineseval.tn.gov.in) இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

தற்காலிக பட்டாசு உரிமம் பெற திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டங்களிலிருந்து விண்ணப்பிப்போர் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம். ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி (பகுதி) மற்றும் திருவள்ளூர் (பகுதி) வட்டங்களிலிருந்து விண்ணப்பிப்போர் ஆவடி காவல் ஆணையரிடத்திலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விண்ணப்பங்களை வரும் 19ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணை நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பித்து, விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

The post தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: