ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் ஆன்லைன் மோசடியில் இருந்து ₹56.44 லட்சம் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆவடி, ஜன. 9: ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் ஆன்லைன் மோசடியில் இருந்து மீட்கப்பட்ட ₹56.44 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் கொடுத்த புகாரை பெற்று மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் வழிகாட்டுதலின் பேரில், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அர்னால்ட் ஈஸ்டர் மேற்பார்வையில், இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில், பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள வங்கிக் கிளைகளுக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்து, பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக 9 மோசடி நபர்களை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல சிறையில் அடைத்தனர். ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலமாக பணத்தை இழந்த 18 பேருக்கு மொத்தம் ₹56.44 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று திருமுல்லைவாயல் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதற்குண்டான சான்றிதழை நேரடியாக வழங்கினார்.

The post ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் ஆன்லைன் மோசடியில் இருந்து ₹56.44 லட்சம் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: