ஆவடி, ஜன. 9: குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகாத வகையில் ஆவடி கோவில்பதாகை ஏரியை ₹38 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணியை அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 41வது வார்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 6000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, 1993ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில் திருவள்ளுவர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கடந்த 27 வருடங்களாக சேதமடைந்து காட்சியளித்தது. இந்த நூலகத்தில் காமராஜர் நகர், ஜெ.பி. எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தன கிரி, பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கட்டிடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில், மழை காலங்களில், தண்ணீர் ஒழுகி, இங்குள்ள புத்தகங்கள் வீணாகும் சூழல் உருவானது. மழைக்காலங்களில், நூலகத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் புகும் அவலமும் பல வருடங்களாக தொடர்ந்தது. இதனையடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த நூலகத்தை வேறு இடத்தில் மாற்றுமாறு அமைச்சர் சா.மு.நாசர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த நூலகம் ஆவடி காமராஜர் நகர், 4வது தெருவில் உள்ள பருத்திப்பட்டு, பசுமை பூங்காவில் இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று காலை, அமைச்சர் சாமு நாசர், இடமாற்றம் செய்யப்பட்ட இந்த நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஆவடி கோவில்பதாகை ஏரியை ₹38 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் மாநகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கினார். மேயர் கு.உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் பேசுகையில், ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள கோயில் பதாகை ஏரியின் கொள்ளளவு 80 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை காலங்களில் கோயில் பதாகை ஏரிக்கு வரும் வெள்ள நீரால் கணபதி நகர் சாலை பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில், இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீரினை கடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், மேயர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் நீரை கிருஷ்ணா நீர் கால்வாய்க்கு கொண்டு செல்லும் வகையில் கோவில் பதாகை ஏரியை ₹38 லட்சம் மதிப்பீட்டில் 2 அடிக்கு ஆழப்படுத்தி தடுப்பணை அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.
The post குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகாத வகையில் ₹38 லட்சத்தில் ஆவடி கோவில்பதாகை ஏரியை ஆழப்படுத்தும் பணிக்கு அடிக்கல்: வெளியேறும் நீர் கிருஷ்ணா கால்வாய்க்கு செல்லும் அமைச்சர் நாசர் தகவல் appeared first on Dinakaran.