வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பிற பணிகளை கண்காணிக்கவும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை அம் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு: நெல்லைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, தேனிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரிக்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரிக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கிருஷ்ணகிரி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காஞ்சிபுரத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பெரம்பலூருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாகப்பட்டினத்திற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மயிலாடுதுறைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் நெல்லை மாவட்டத்தை கவனித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மீண்டும் கோவை மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

The post வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: