அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை, மேனாம்பேடு சாலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பலர் நடந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்றவர்களை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டையை சேர்ந்த அசன் மைதீன் (35), தனசேகரன் (47), உ.பி. மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (35), பீகாரை சேர்ந்த தீபக் (27) ஆகிய 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அதே மர்ம கும்பல், அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே நடைபாதை உணவகத்தில் இரவு உணவு வாங்க வந்த திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டை சேர்ந்த நவீன் (20) என்பவரின் தலையில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயம் அடைந்த நவீன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது தலையில் 22 தையல்கள் போய்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, அம்பத்தூர் மங்களபுரத்தை சேர்ந்த நித்தியவேல் (20), லோகேஷ் (19), மணிகண்டன் (22) என தெரியவந்தது. போலீசார் தீவிரமாக தேடியபோது அம்பத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த நித்தியவேல், லோகேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

முன்னதாக தப்பியோட முயன்ற நித்தியவேலை போலீசார் பிடித்தபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், ஏற்கனவே நித்தியவேல், லோகேஷ் ஆகியோர் வழக்குகள் தொடர்பாக சிறை சென்று வந்தவர்கள். கடந்த 29 நாட்களாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இரு வேளையும் நித்தியவேல் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

நித்தியவேலுக்கும் லோகேஷுக்கும் சிறை வாழ்க்கை பிடித்து போனதால், நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் கடைசி கையெழுத்திட்டு வெளியே வந்ததும், பொதுமக்களை அச்சுறுத்தி, 5 பேரை கத்தியால் சரமாரி வெட்டியிருப்பதும் இதற்கு மணிகண்டன் உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைதான லோகேஷ், நித்தியவேல், மணிகண்டன் ஆகிய 3 பேரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: