திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி மீது வேன் மோதி 4 பக்தர்கள் பலி

திருமலை: திருப்பதி கோயிலுக்கு சென்று வீடு திரும்பியபோது லாரி மீது வேன் மோதியதில் 4 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 10பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் அமராபுரம் மண்டலம் காயன்பள்ளி கிராமத்தை சேர்ந்த 13 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேனில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு மீண்டும் தங்களது கிராமத்திற்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை மடக்கஷிரா மண்டலத்தில் உள்ள புல்லாசமுத்திரம் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உள்பட 10பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மடக்கஷிரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து 4பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பலியானவர்கள் காயன்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார்(30), அதர்வா(2), ரத்னம்மா(70), மனோஜ்(32) என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் கம்பன்னா, கஞ்சம்மா, கீதாலட்சுமி, சுஜாதாம்மா, கிரிஜாம்மா, நாகமணி, உஷா, ஆமாஜாம்மா, தேவி, சுவேதா என்பதும் தெரிய வந்தது. தூக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி மீது வேன் மோதி 4 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: