காக்களூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காக்களூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், துணைத் தலைவர் எம்.எஸ்.சிவராமகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆர்.ராகவன், கே.ஆனந்தபாபு, எச்.பிரசாந்த், கே.மகேஸ்வரி, எம்.பானுதேவி, ஆர்.குமரன், எஸ்.கீதாஞ்சலி, வி.பிரவீனா, எஸ்.சுனில்குமார், எஸ்.சித்ரா முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அளவிற்கு ஊராட்சி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்நிலையில் ஏழ்மையான, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வரும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

மேலும், காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும்போது வீட்டு வரி, நிலவரி, குடிநீர் வரி அனைத்தும் உயர்ந்துவிடும். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post காக்களூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: