அரியானாவில் ஆடு, மாடுகளை திருடியவர்கள் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறி உள்ளனர்: நாமக்கல் எஸ்பி பேட்டி

நாமக்கல்: ஆரம்ப காலத்தில் ஆடு, மாடு மற்றும் லாரிகளை திருடி விற்றவர்கள், பிற்காலத்தில் பிற மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளையர்களாக மாறியுள்ளனர். இவர்கள் தோற்றத்தையும், பெயரையும் மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது என நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் ரூ.67 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பமுயன்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த 7 கொள்ளையர்களை, கடந்த 27ம் தேதி குமாரபாளையம் அருகே, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மடக்கினர். அப்போது தப்பமுயன்ற ஒருவனை போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். இதில் அவன் உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் காலில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறான். 5 பேரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று நாமக்கல்லில் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வடமாநில கொள்ளையர்களிடம் விசாரணை முடிவடைந்து, அவர்களை நீதிமன்ற காவல் மூலம் சிறையில் அடைத்துள்ளோம். கொள்ளையர்கள் 6 பேர் மீதும் தலா 4 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி செய்தது, சாலையில் கன்டெய்னரை வேகமாக ஓட்டிச்சென்று டூவீலர் மற்றும் காரில் சென்றவர்கள் மீது மோதி, அவர்களையும் கொல்ல முயன்றதாகத்தான் வழக்குபதிவு செய்ய முடியும். விசாரணையின் போது அவர்கள் பல தகவல்களை மறைத்துள்ளனர். ஒரு கொள்ளையன் தனது பெயரை கூட மாற்றி சொல்லியுள்ளான். மேற்கு வங்க மாநிலத்திலும் இவர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அரியானா மாநில எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் இந்த கொள்ளையர்கள் ஆரம்பத்தில், ஆடு, மாடுகளை திருடி உள்ளனர். பின்னர் லாரிகளை திருடி விற்று வந்துள்ளனர். பின்னர் தான் ஏடிஎம் சென்டர்களை கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர். பல மாநிலங்களில் இவர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையன் முகமது இக்ரம் மீது, மேற்கு வங்க மாநிலத்திலும் ஏடிஎம் கொள்ளை வழக்கு உள்ளது. அங்கு ஏற்கனவே அவனை எடுத்த போட்டோவுக்கும் தற்போது உள்ள தோற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. கொள்ளையர்கள் போன்று தெரியாத அளவுக்கு தோற்றத்தை மாநிலங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில கொள்ளையர்கள் குறித்த தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி விபரங்கள் சேரிக்கப்படும். இதுபோன்ற கொள்ளையர்களில் சிலர் தற்போது ஆன்லைன் மோசடியிலும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் 5 கொள்ளையர்களையும் விசாரணை நடத்த நீதிமன்ற மூலம் போலீஸ் கஸ்டடி எடுக்கப்படும். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பாக 5 பேரையும், கேரளா போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.

 

The post அரியானாவில் ஆடு, மாடுகளை திருடியவர்கள் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறி உள்ளனர்: நாமக்கல் எஸ்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: