ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம்: ஒன்றிய குழுவிடம் தமிழக அரசு புகார்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் சூழலை கண்காணிக்க அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட ஒன்றிய அரசின் நிபுணர் குழு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் ஒன்றிய அரசிடம் இருந்து வருவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 578 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி ஒமிக்ரான் பாதிப்பில் டெல்லி முதலிடத்தை பிடித்தது. அதன்படி டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும், குஜராத்தில் 49 பேர், ராஜஸ்தான் 43 பேர், தெலங்கானாவில் 41 பேர், தமிழ்நாட்டில் 34 பேர், கர்நாடகாவில் 31 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் 97 பேருக்கு ‘எஸ்’ ஜீன் டிராப் வகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திற்கான குழுவில் ஒன்றிய சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் டாக்டர் புர்பசா, டாக்டர் வினிதா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் 5 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஆய்வுப்பணியின் முதல் நாளான நேற்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் ஒன்றிய அரசின் குழு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அரசின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலின் நிலை, குணமடைந்தோரின் விகிதம், தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம், மருத்துவனைகளில் ஒமிக்ரான் வார்டுகள் விவரம், தடுப்பூசி கையிருப்பு ஆகியவை குறித்து காணொலி மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஒன்றிய அரசின் குழுவினருக்கு விளக்கினர். பின்னர், ஒன்றிய குழு சென்னை விமான நிலையம், கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை நடைமுறையை பார்வையிட்டது. இதையடுத்து, கிங் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருவோரின் விவரங்களையும், அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை கேட்டறிந்தது. ஒன்றிய குழுவினர் உடனான ஆலோசனைக்கு பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல், குன்னூரில் உள்ள பேஸ்ட்ரியல் ஆகிய இரு நிறுவனங்களிலும் தடுப்பூசியை நாமே தயாரித்தால் தென்னகத்திற்கு தடுப்பூசி தட்டுப்பாடு வராது என்று கூறினோம். ஜனவரி 16ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை 103 நாட்களில் தினசரி போடப்பட்ட தடுப்பூசியின் சராசரி என்பது 61,441. ஆனால், இன்று தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி காட்டியதன் மூலம் இன்றைய தினசரி சராசரி என்பது 3,26,000 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்கினால் தட்டுப்பாடு இருக்காது என்பது குறித்தும் அவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. தமிழகத்தில் மட்டும் தான் மரபணு ஆய்வகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளோர் 16 பேர் மட்டுமே. நம்மிடம் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டு ஒமிக்ரான் பாதிப்பை கண்டறிந்து அறிவிக்கும் அனுமதியை தந்தால் பேரிடர் காலத்தில் உடனுக்குடன் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 10 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் ஆகும் போதுதான் இவர்களுக்கு தொற்று இருக்கிறது என்று உறுதிபடுத்தி ஒன்றிய அரசு தகவலை அனுப்புகிறார்கள். கடந்த வாரம் நைஜிரியாவில் இருந்து வந்தவர்கள் டிஸ்சார்ஜ் ஆகின்ற அன்று தான் அவர்களுக்கு தொற்று இருக்கிறது என்று அறிவித்தார்கள். எனவே, இந்த கால இடைவெளியை குறைக்க ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்குதான் ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே, தான் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதம் எழுதி ஒருவாரம் ஆகிறது. ஆனால், இன்னும் அதற்கு பதில் வரவில்லை. இதற்கு பதில் வந்தால் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தொற்று எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஒன்றிய குழுவினரிடம் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்….

The post ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம்: ஒன்றிய குழுவிடம் தமிழக அரசு புகார் appeared first on Dinakaran.

Related Stories: