குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை: 9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல்


பெரம்பூர்: சென்னையில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை சோதனை நடத்த அந்தந்த காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதியில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதி உத்தரவின் பேரில், அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் 2 குழுக்களாக பிரிந்து அயனாவரம் காவல் நிலையம் மற்றும் தலைமைச் செயலக காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் கடுமையான சோதனை செய்தனர்.

பள்ளி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான கூல் லிப் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டேரி சந்தியப்பன் மெயின் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்து கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, சதீஷ் (30) என்பவர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வில்லிவாக்கம் தாதா குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், சிறிய அளவில் குட்கா வைத்திருந்த பலரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் சிறிய அளவில் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கூட அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.

புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வியாசர்பாடி போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், வியாசர்பாடி சுந்தரம் 6வது தெருவை சேர்ந்த ஆண்டனி ராஜ் (எ) சஞ்சய் (21) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டிமலர்ஸ் சாலையில் போலீசார் சோதனை செய்தபோது ஏழுகிணறு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த நதியா (38) என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மூலக்கடை நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே போலீசார் சந்தேகத்திற்கு இடமான ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவரிடம் 25 பாக்கெட் குட்கா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், பெரம்பூர் சுப்பிரமணிய தோட்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (29) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மூலக்கடை நெடுஞ்சாலையில் உள்ள, ஒரு ஆட்டோவை வைத்து கஞ்சா விற்ற ஷெனாய் நகரை சேர்ந்த தண்டபாணி (44) மற்றும் அண்ணா நகரை சேர்ந்த பாலமுருகன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடம் குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த வசந்தகுமார் (எ) பூச்சி வசந்த் (22) மற்றும் பிரவீன் குமார் (எ) குள்ள பரவீன் (21) என்பது தெரிய வந்தது. இருவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

The post குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை: 9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: