சென்னையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் சிதிலமடைந்த வீடுகளை இடித்து குடியிருப்புகள் கட்டி தரப்படும்: வாழ தகுதியற்ற 23,000 வீடுகள் இடிக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

சென்னை: வரும் 5 ஆண்டுகளுக்குள் சென்னையில் சிதிலமடைந்த அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததை பார்வையிட்ட பின் அமைச்சர் தா.மோ அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த குடியிருப்புகள் அதிமுக ஆட்சி காலத்தில் பயனாளிகளே தேர்வு செய்யப்படாமல் கட்டப்பட்டது. சென்னையில் மட்டும் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23,000 வீடுகள் வாழ்வதற்கே தகுதியில்லாத நிலையில் உள்ளது. இந்த நிதி ஆண்டிற்கு மட்டும் (2021-2022) 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வர் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில் சிதிலமடைந்த குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.   விரைவில் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகளை இழந்த குடியிருப்புதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் மாற்று இடம் தரவேண்டும் என குழு பரிந்துரைத்தால் அவர்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும். இப்பகுதியில் சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.1.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை புனரமைக்க முதல்வர் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சென்னையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் சிதிலமடைந்த அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் மற்றும் கே.பி.சங்கர், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் (வடக்கு) எம்.சிவகுரு பிராபாகரன், வாரிய தலைமை பொறியாளர் ராம சேதுபதி ஆகியோர் உடன் இருந்தனர்….

The post சென்னையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் சிதிலமடைந்த வீடுகளை இடித்து குடியிருப்புகள் கட்டி தரப்படும்: வாழ தகுதியற்ற 23,000 வீடுகள் இடிக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: