திருத்தணி கே.ஜி.கண்டிகை பகுதியில் கடந்த 2 நாட்களில் 16 பேரை கடித்து குதறிய வெறிநாய்: சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெறிநாய் ஒன்று அங்குள்ள நொச்சிலி சாலை, பேருந்து நிலையம், எஸ்.அக்ரஜஹாரம் சாலை பகுதிகளில் நடந்து செல்லும் பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளை கடித்துக் குதறி வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 13 பேரை வெறிநாய் கடித்துக் குதறியது. அவர்கள் அனைவரும் பீரகுப்பம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு வெறிநாய் கடிக்கு ஊசிபோட்டுக்கொண்டு வீடு திரும்பினர்.

நேற்று காலை லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் நொச்சிலி சாலையில் நடந்து சென்றபோது அவரை வெறிநாய் கால் பகுதியில் கடித்துக் குதறியது. அதேபோல் மாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக சென்ற குப்பம்மாள் (62) என்ற மூதாட்டியை வெறி நாய் கை மற்றும் கால் பகுதியில் கொடூரமாக கடித்துக் குதறியது. அங்கிருந்தவர்கள் மூதாட்டியை வெறி நாயிடமிருந்து காப்பாற்றி பீரகுப்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் வெறிநாய்க்கடி ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர். 2 நாட்களில் மட்டும் 16 பேரை வெறி நாய் கடித்துள்ளதால், கே.ஜி.கண்டிகையில் சாலைகளில் நடந்து செல்வதற்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

* வெறிநாய் குறித்து புகார்
வெறிநாய் பொதுமக்களை கடித்துக்குதறி வரும் சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிமன்ற தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி தெரிவித்தார். வெறிநாயை பிடித்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தெரிவித்தார்.

The post திருத்தணி கே.ஜி.கண்டிகை பகுதியில் கடந்த 2 நாட்களில் 16 பேரை கடித்து குதறிய வெறிநாய்: சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: