மெட்ரோ ரயில் பணிகளால் மழை நீர் தேங்குகிறது; சென்னையில் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: குறுகிய சாலைகளில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் நேற்று இரவு பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக இருப்பதால் முக்கிய பிரதான சாலைகளில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் சாலைகளின் இடையே மெட்ரோ துண்கள் மற்றும் சுரங்க பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மெட்ரோ பணிகளால் அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, ராஜீவ் காந்தி சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஒரு வழிபாதைகளாக மாற்றியுள்ளனர். அதேநேரம் அதிக வாகன நெரிசல்கள் உள்ள பகுதிகளான வள்ளுவர்கோட்டம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பீக்ஹவரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் யூ வளைவுகள் மூடப்பட்டு குறுகளான சாலைகளில் சுற்றி வருவது போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. சாலையில் இடையே மெட்ரோ பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த குறுகளான சாலைகளில் மழை நீர் தேங்கியும், பள்ளங்களால் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையில் இருந்து ஸ்கைவாக் வழியாக அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலைகளில் இன்று காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. லயோலா சுரங்கப்பபதையிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல் வடபழனியில் இருந்து வள்ளுவர் கோட்டம் வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களும் சேதமடைந்த வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கிறது.பல இடங்களில் மழை காரணமாக போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யவில்லை. அதேபோல் பிரதான சாலைகளை தர உட்புற சாலைகள் வழியாக வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் பணிகளில் இல்லாததால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

அண்ணாசாலை, வடபழனி 100 அடி சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளுடன் இணைக்கும் சாலைகளில் நேற்று இரவு நிறுத்தப்பட்ட கனரக வாகனங்கள் மழை காரணமாக இன்று காலை எடுக்காததால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். அதேபோல் மழை நீர் வடிகால்வாய் பணிகள் காரணமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்பட்டது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பே சேதமடைந்த சாலைகளை சீர்செய்யவும், மெட்ரோ ரயில் பணிக்காக சேதடைந்த சாலைகளையும் சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மெட்ரோ ரயில் பணிகளால் மழை நீர் தேங்குகிறது; சென்னையில் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: குறுகிய சாலைகளில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: