காவலர் பல்பொருள் அங்காடியில் ஊர்க்காவல் படையினரும் பொருட்கள் வாங்கும் திட்டம்

*கமிஷனர் அருண் தொடங்கி வைத்து அடையாள அட்டை வழங்கினார்

சென்னை : ஊர்க்காவல் படையினரும் காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையில் 104 காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்களில் சட்டம் -ஒழுங்கு, இதர ரோந்து பணிகள், கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், இயற்கை பேரிடர் காலங்களில் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவுதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, சென்னை பெருநகர காவல்துறையில் 1,986 ஆண்கள், 270 பெண்கள் என மொத்தம் 2,256 ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணித் திறனை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 21.4.2013ம்தேதி காவல்துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் காவலர் பல்பொருள் அங்காடி வசதி ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தமிழக அரசாணையை செயல்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண், சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினர், காவலர் அங்காடியில் பொருட்கள் வாங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள திட்டத்தை தொடங்கி வைத்தார். அதற்கான அடையாள அட்டைகளையும் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊர்க்காவல் படையினரும் மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மளிகை பொருட்களும், வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மின்சாதன வீட்டு உபயோக பொருட்களும் வாங்கலாம். இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஆயுதப்படை துணை கமிஷனர் ஜெயகரன், அன்வர்பாஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post காவலர் பல்பொருள் அங்காடியில் ஊர்க்காவல் படையினரும் பொருட்கள் வாங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: