தீபாவளி பண்டிகை விற்பனை

கரூர், செப். 26: கரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டி விற்பனைக்காக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், உரிய விதிகளுடன் உரிமம் பெற விண்ணப்பிக்க கலெக்டர் மீ.தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் தீபாவளிப்பண்டிகை இந்துக்கள் பண்டிகை என்றாலும், அனைத்து மதத்தினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி, உறவினர்கள், நண்பர்கள் இடையே வாழ்த்துக்கள் கூறி கொண்டாடி மகிழ்வர். அதில், அக்டோபர் 31ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் கிராமம் முதல் மாநகரங்கள் வரை பட்டாசுகள் விற்பனை செய்வர். பட்டாசு இருப்பு வைப்பதில், விற்பது, வெடிப்பது போன்றவற்றில் விபத்துக்கள் ஏற்பட்டு, பொருளாதார, உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முறைப்படுத்த தீயணைப்பு, வருவாய், சுற்றுச் சூழல், காவல் துறைகள் இணைந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை நடத்த விரும்புவோர் உரிமம் பெற விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் மீ.தங்கவேல் செய்தி குறிப்பு விவரம்: ‘பட்டாசு வியாபாரத்தை உரிய நேரத்தில் தொடங்குவதற்கு வசதியாக, பல்வேறு விதிமுறைகளை கடைபிடித்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் இணைய வழியில் இ-சேவை மையம் மூலமாக வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008ல் உள்ள விதி 84ஐ முறையாக கடைபிடித்து தற்காலிக பட்டாசு கடை அமையவுள்ள இடத்தை பொதுமக்களுக்கு சிரமமின்றி, பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்தில் மட்டும் விண்ணப்பம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

 பாதுகாப்பான இடம்: மேலும், பட்டாசு விற்பனை செய்யப்படும் கடைகளில் மேல்மாடி இருக்க கூடாது, பட்டாசு கடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டிடங்கள் இருக்க கூடாது. இதுபோன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு, முந்தைய காலத்தில் கடை உரிமம் பெற்றவர்கள், தற்போதைய விண்ணப்பத்துடன் முன்னர் பெற்ற உரிம நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 ஆவணங்கள்: விண்ணப்பத்தார்கள் பல்வேறு விபரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அதன்படி, மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம் ஏ4 அளவில். கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள். உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரூ. 600ஐ ஐஎச்எச்ஆர்எம்எஸ் என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு, மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோருதல் இடத்தின் உரிமையாளர் எனில் அதற்காக ஆவணங்கள் மற்றும் நடப்பு ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை இடம் எனில், வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் ஒப்புதல் கடிதம், முகவரி ஆதாரமாக (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பேன் கார்டு, ஸ்மார்ட் கார்டு). பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியன.

விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையவழியின் முலமாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: