வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது

பெரம்பூர்: ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்த 4 சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் காலை குடிபோதையில் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்துவதாக ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் ஓட்டேரி சேமாத்தம்மன் காலனி 9வது தெருவுக்குச் சென்று போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஓட்டேரி சேமாத்தம்மன் காலனி ஒன்றாவது தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (எ) எலி சுந்தரமூர்த்தி (35) மற்றும் புளியந்தோப்பு கேஎம் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பா (எ) கமல் (29) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் இவர்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வியாபாரிகளை மிரட்டி சரித்திர பதிவேடு ரவுடிகள் பணம் பறிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் தலைமையிலான போலீசார் புளியந்தோப்பு பி.கே.காலனி பகுதியைச் சேர்ந்த வெற்றி (29) மற்றும் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் (22) ஆகிய 2 சரித்திர பதிவேடு ரவுடிகளை கைதுசெய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: