ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம் ஒன்றிய குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலகர் கலைச்செல்வி வரவேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய கவுன்சிலர்கள்; வரவு, செலவு கணக்கு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது பொது விவாதம் நடைபெற்றது. இதில், 38 ஊராட்சிகள் கொண்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர், சாலை, கழிவுநீர், பள்ளி, அங்கன்வாடி, தெரு விளக்குகள் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உமாபதி, பிரமிளா வெங்கடேசன், தனலட்சுமி காளத்தீஸ்வரன், நதியா திருஞானம், செல்வி சந்தோஷ், திருநாவுக்கரசு, ஏ.பி.சந்திரன், கோவிந்தம்மாள் ஆனந்தன், சி.கே.கார்த்திகேயன், ஜமுனா குமாரசாமி, கல்விக்கரசி சேகர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

* புதிய ஊராட்சி
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 5 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட விடியங்காடு ஊராட்சியை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து புதிய ஊராட்சி ஏற்படுத்த வேண்டும் என்று திமுக ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் தீர்மானம் கொண்டு வர அது நிறைவேற்றப்பட்டது. மேலும், சோளிங்கரில் இருந்து சித்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை கோபாலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆறுபடை முருகன் கோயில் பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: