கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை: போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றபோது ‘என்கவுன்டர்’


சென்னை: கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் தொடந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சீசிங் ராஜாவை (51) போலீசார் ஆந்திராவில் நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு பார் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில், பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை பறிமுதல் செய்ய நீலாங்கரை அடுத்த அக்கரைக்கு அழைத்து சென்ற போது, இன்ஸ்பெக்டர் மீது கள்ளத் துப்பாக்கியால் சுட்டார். இதனால் போலீசார் தற்பாதுகாப்புக்கு சுட்டத்தில் ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நரசிம்மன் மற்றும் அங்காளம்மாள் தம்பதியின் மகன் சீசிங் ராஜா. இவரது பெற்றோர் பிழப்பு தேடி சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் குடியேறினர். வறுமை காரணமாக 10ம் வகுப்புடன் தனது பள்ளி படிப்பை கைவிட்டார்.

பிறகு தனது தந்தையுடன் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பிறகு புதிய மற்றும் பழைய வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் சீசிங் ராஜா வேலைக்கு சேர்ந்தார். அப்போது பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணம் கட்ட முடியாத நபர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியை சீசிங் ராஜா செய்து வந்தார்.அந்த நேரத்தில், தாம்பரத்தில் மார்க்கெட்டில் உள்ள ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு ரவுடியாக உருவானார். சீசிங் ராஜாவுக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ஜானகி(42), இரண்டாவது மனைவி ஜான்சி(36), மூன்றாவது மனைவி வனித்ரா(27). முதல் மனைவி ஜானகிக்கு கீர்த்தனா பிரியா(22) என்ற மகள், தனுஷ்(20) என்ற மகன் உள்ளனர். மகள் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார். மகன் தனுஷ் வண்டலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

2வது மனைவி ஜான்சியின் மகன் யோகேஷ் சேலையூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மூன்றாது மனைவி வனித்ராவுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதுதவிர, சீசிங் ராஜா கோவிலம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்று நடத்தி வரும் ராஜலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் 2 கார் தொழிற்சாலைகள் அமைந்த பிறகு, தனது தொழிலை அவர் பெரிய அளவில் மாற்றிக்கொண்டார். 2 கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையில் உள்ள ‘ஸ்கிராப்’ எனப்படும் இருப்பு மற்றும் எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களை மொத்தமாக டெண்டர் எடுக்கும் பணியை செய்து வந்தார்.

இந்த தொழில் போட்டியால் சீசிங் ராஜா காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் பல கொலைகளை சீசிங் ராஜா செய்து வந்தார். தொழிற்சாலை கழிவுகள் மூலம் பல கோடி அளவுக்கு லாபம் கிடைத்ததால் வடசென்னையில் உள்ள ரவுடிகளுடன் நேரடியாக போட்டி ஏற்பட்டது. ஆரம்பாத்தில் ரவுடி குணாவின் கூட்டாளியாக இருந்தார். அப்போது தான் சீசிங் ராஜா பிரபல ரவுடி சம்பவ செந்திலுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு மூலம் சீசிங் ராஜா வட சென்னை ரவுடிகளை நேரடியாக எதிர்க்க தொடங்கினார். சீசிங் ராஜா தன்னுடன் எப்போதும் 6 பேரை பாதுகாப்புக்காக வைத்திருப்பார். சீசிங் ராஜா தனது கூட்டாளிகளான ரவுடிகள் ஆற்காடு சுரேஷ், ஆதி(எ) படப்பை ஆதி, மார்க்கெட் சிவா, கண்ணன் உள்ளிட்ட ரவுடிகளுடன் நட்பபை ஏற்படுத்தி கொண்டு தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி பல கோடி ரூபாய் பணம் பறித்து வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2006ம் ஆண்டு ரமணி என்பவரை சீசிங் ராஜா வெட்டி கொலை செய்தார். 2008ம் ஆண்டு வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரை வெட்டி படுகொலை செய்தார். அதே ஆண்டு ராஜமங்கலம் காவல் எல்லையில் விஜி என்பவரை வெட்டி படுகொலை செய்தார். 2010ம் ஆண்டு ஸ்கிராப் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் தனது கூட்டாளியான ஆற்காடு சுரேஷ் உடன் இணைந்து சின்னா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 வழக்கறிஞர்களை வெட்டி படுகொலை செய்தார். கடந்த 2015ம் ஆண்டு ஆந்திர மாநிலம் வெங்கல் பகுதியில் இரட்டை படுகொலை வழக்குகள் என 6 கொலை வழக்குகள், மணிமங்கலம் காவல் எல்லையில் கொலை முயற்சி வழக்கு, தேனாம்பேட்டை, நெல்லூர், திருப்பதி, சிட்லப்பாக்கம், வேளச்சேரி ஆகிய 5 காவல் நிலையங்களில் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்ளன.

2 வழிப்பறி வழக்குகள், 1 கூட்டு கொள்ளை வழக்கு என மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதோடு இல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களை அடையாளம் கண்டு, பல ேகாடி மதிப்புள்ள அந்த இடத்தை போலி ஆவணகள் மூலம் அபகரித்து ரியல் எஸ்டேட் செய்து வந்துள்ளார். இதனால், சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்ற வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால், சீசிங் ராஜா போலீசாரின் கைதுக்கு பயந்து கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆந்திராவில் பதுங்கி இருந்தாலும், அடிக்கடி சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே சீசிங் ராஜாவை சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் தனித்தனியாக குழுக்கள் அமைத்து தேடி வந்தனர்.

அதில், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சண்மானம் வழங்கப்படும் என்று சீசிங் ராஜா புகைப்படத்துடன் சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு தேடி வந்தனர். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ரவுடி சீசிங் ராஜா கடந்த மாதம் சென்னைக்கு வந்து, வேளச்சேரி பகுதியில் பார் நடத்தும் ஆனந்தன் என்பரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆனந்தன் வேளச்சேரி காவல் நிலையத்தில் ரவுடி சீசிங் ராஜா மீது புகார் அளித்தார். அந்த புகாரின் மீது வேளச்சேரி போலீசார் பிஎன்எஸ் 294(பி), 341, 323, 427, 397, 506(2) மற்றும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் சீசிங் ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அதேநேரம் ஒரு பக்கம், வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ள ஏ பிளஸ் ரவுடிகளை கைது செய்யும் பணியில் தனிப்படையினர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

அந்த வகையில், தனிப்படையினர் ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா தனது 2வது மனைவியுடன் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக விடுதிக்கு வந்த போது சீசிங் ராஜாவை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படையினர், துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேளச்சேரி இன்ஸ்பெக்டர் முகில் மற்றும் அடையார் இன்ஸ்பெக்டர் இளங்கனி ஆகியோர் ரவுடி சீசிங் ராஜாவை பார் உரிமையாளர் ஆனந்தனை மிரட்டிய வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை நீலாங்கரை அடுத்த அக்கரை பக்கிங்காம் கால்வாய் அருகே பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று அதிகாலை நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதிக்கு அழைத்து சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது, சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட் சுட்டார். அப்போது வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் தற்பாதுகாப்புக்காக திரும்ப சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா மார்பு மற்றும் மேல் வயிறு ஆகிய 2 இடங்களில் தோட்டா பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரிடம் இருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் என்கவுன்டர் ெசய்தது தொடர்பாக வேளச்சேரி போலீசார் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பிறகு உயிரிழந்த ரவுடி சீசிங் ராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்திற்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை பெருநகர தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி.சக்கரவர்த்தி, தி.நகர் கமிஷனர் குத்தாலிங்கம், கிண்டி உதவி ஆணையர் விஜயராமுலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினரும் ஆய்வு செய்து தடயங்களை பதிவு செய்தனர். சீசிங் ராஜா என்கவுன்டர் தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் 18ம் தேதி காக்கா ேதாப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது சீசிங் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கொலை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் வழக்கில் தொடர்படைய ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

The post கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை: போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றபோது ‘என்கவுன்டர்’ appeared first on Dinakaran.

Related Stories: