பத்து ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் இல்லை: திருமாவளவன் அட்டாக்

விருதுநகர்: பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் தமிழக மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி விருதுநகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆட்சிக்கு வந்தால் ஈழமே கிடைத்து விடும் என்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். பாஜ 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.

இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்னையில் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இல்லை. அவர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத அரசு பாஜ அரசு. இது நாடக அரசு.  ஒரே மதம், ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்பதை போல ஒரே தேர்தல் என்பதும் அவர்களின் அரசியல் செயல்திட்டங்களில் ஒன்று. குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டு வருவதற்காக முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு தேசத்தை ஒரு கட்சி, ஒரு ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்தார். பாஜ ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ‘‘பாஜ ஆளுகிற உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு இருக்கிறதா? இதற்கு பாஜகவினர் பதில் கூறுவார்களா? குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது. காந்தியடிகளை மதிக்கும் வகையில், அவருடைய உயிர் மூச்சு கொள்கையை போற்றும் வகையில் காங்கிரசால் அங்கு மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது’’ என்றார்.

The post பத்து ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் இல்லை: திருமாவளவன் அட்டாக் appeared first on Dinakaran.

Related Stories: