முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை: தயாநிதிமாறன் எம்.பி பேட்டி

கோவை: ‘முதுகு தண்டு வளைந்து கொண்டே இருப்பதால்தான் அதிமுகவால் நிற்க முடியவில்லை’ என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், நாடாளுமன்ற குழு துணை தலைவருமான தயாநிதி மாறன் எம்.பி. கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் தங்களது பிரச்னையை சொன்னால் அதனை திசை திருப்பும் முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. சிலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறு 10 ஆண்டுகளாக ஒருவர் ஒன்றிய அமைச்சராக உள்ளார். மக்கள் பிரச்னைகள் அவருக்கு தெரிவதில்லை. கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று சொல்கிறார். வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசனை கூப்பிட்டு வைத்து மன்னிப்பு கேட்க வைத்தது கோவை மக்கள் மீது அவர்களுக்கு இருந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

அதில் குஜராத்தி ஒருவர் இவ்வளவு வரி போடுகிறீர்கள், இதனால் நீங்கள் ஸ்லீப்பிங் பார்ட்னராக உள்ளீர்கள் எனவும், என் பணத்தால்தான் இந்திய அரசாங்கமே நடக்கிறது என்றபோது, ஒன்றிய நிதியமைச்சர் சிரிக்கிறார். இந்தி பேசினால் ஒரு மரியாதை, நாங்கள் தமிழ் பேசினால் என்ன இளக்காரமா? கேட்பது எங்கள் உரிமை. அதனை நிவர்த்தி செய்வதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்பு. ஆனால் தமிழன் கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்க வைக்கிறார்கள்.

மக்கள் சேவைகளை சிறப்பான முறையில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது. அதிமுக கஷ்டமான கால கட்டத்தில் உள்ளது. அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு அடிமையாக இருந்தது. சசிகலாவின் காலை பிடித்தார்கள். முதுகு தண்டு வளைந்து கொண்டே இருப்பதால்தான் அவர்களால் நிற்க முடியவில்லை. பாஜ ஆட்சியில் 10 ஆண்டு தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. பாஜ அரசு என்ன சொன்னாலும் அதனை தலை குனிந்து செய்தார்கள். அதற்கு முக்கிய பொறுப்பு எடப்பாடியைதான் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை: தயாநிதிமாறன் எம்.பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: