சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இருக்கும். குறிப்பாக மழைக்கால மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்களில் நோய் அதிகரித்து காணப்படும். அதே போல இந்த ஆண்டும் சென்னையில் தற்போது காய்ச்சல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் கடந்த சில தினங்களாக குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் சளி, காய்ச்சல் போன்ற பருக்கால நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சலுடன் கூடிய இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகளால் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மழை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் காலங்களில் இன்புளுயன்சா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: தற்போது காலநிலை மாற்றத்தால் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. குறிப்பாக சளி, தொண்டை வலி, காய்ச்சலுடன் எச்1என்1, எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவக்கூடியது.

அந்த இன்புளுயன்சா வைரஸ் தான் குழந்தைகள், முதியவர்களிடையே பரவி வருகிறது. இதனால் இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்ததில், 10 நபா்களில் 7 முதல் 8 நபா்களுக்கு நுரையீரல் சார்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த பிறகு சிலருக்கு காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்களில் குறைகிறது மற்றும் தொண்டை வலி மேம்படுகிறது.

இருமல் சிலருக்கு இரண்டு வாரங்கள் நீடிக்கும், சிலருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கும். நோய்த்தொற்று உள்ள சில முதியவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆக்சிஜன் உதவி உடன் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் குழந்தைகள் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் சுவாச கோளாறு ஏற்பட்டு பல குழந்தைகள் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

இருப்பினும் இரண்டு முதல் மூன்று நாட்களில் குழந்தைகள் குணமடைகின்றனர். பருவமழை காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் சுய சிகிச்சை எடுத்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: